சிப்காட் வளாகத்தில் புதிய கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் குடோனை பா.ம.க.வினர் முற்றுகையிட முயற்சி


சிப்காட் வளாகத்தில் புதிய கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் குடோனை பா.ம.க.வினர் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 31 Aug 2017 5:00 AM IST (Updated: 31 Aug 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகர் அருகே சிப்காட் வளாகத்தில் புதிய கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் குடோனை பா.ம.க.வினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அடுத்த சிப்காட் வளாகத்தில் டாஸ்மாக் குடோன் அமைந்துள்ளது. இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சில்லரை மதுபானங்கள் எடுத்து செல்லப்படுகிறது. இந்த நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் குடோனை நிரந்தரமாக மூடவேண்டும், சிப்காட் வளாகத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, சிப்காட் வளாகத்தில் நேற்று காலை அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், சரவணன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் முன்னிலையில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் சிவ.ரமேஷ், மாநில இளைஞரணி துணை செயலாளர் சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் வி.ரமேஷ், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் வாட்டர் மணி மற்றும் குடிகாடு கிராம மக்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் குடோனை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பா.ம.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பா.ம.க.வினர் மற்றும் கிராம மக்கள் சிலரை மட்டும் பேச்சுவார்த்தை மாவட்ட மேலாளரை சந்திக்க அனுமதிப்பதாக போலீசார் கூறினர். இதை ஏற்று, மாவட்ட மேலாளர் விஸ்வநாதனை பா.ம.க. நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

இதில் இப்பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி புதிதாக கடை அமைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story