‘நீல திமிங்கலம்’ விளையாட்டால் விபரீதம்: மதுரையில் கல்லூரி மாணவர் தற்கொலை
நீல திமிங்கலம் விளையாடிய மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பரங்குன்றம்,
மதுரை திருப்பரங்குன்றம் விளாச்சேரியை அடுத்த மொட்டமலையை சேர்ந்தவர் ஜெயமணி. பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய 2–வது மகன் விக்னேஷ் (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புதிதாக ஆன்ட்ராய்டு செல்போனை பெற்றோர் வாங்கிக்கொடுத்தனர்.
தடை செய்யப்பட்ட ‘புளூ வேல்’ எனப்படும் நீல திமிங்கலம் விளையாட்டை அந்த செல்போன் மூலம் விக்னேஷ் விளையாடி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது மாணவர் விக்னேஷ் தனது வலது கையில் திமிங்கலத்தின் படத்தை வரைந்து இருந்தது தெரியவந்தது. மேலும் அவரது நோட்டு புத்தகங்களிலும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், “நீல திமிங்கலம் விளையாட்டல்ல. விபரீதம். உள்ளே சென்றால், வெளியே வர முடியாது’’ என்றும் எழுதி வைத்து இருந்தார்.
இதனால் அவர் இணையதளம் வழியாக புளூ வேல் விளையாட்டை விளையாடியதால் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.