600 ஏக்கர் அரசு நிலத்தை மந்திரி ஆக்கிரமித்துள்ளார் விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன் என எடியூரப்பா பேட்டி


600 ஏக்கர் அரசு நிலத்தை மந்திரி ஆக்கிரமித்துள்ளார் விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன் என எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 1 Sept 2017 2:00 AM IST (Updated: 1 Sept 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

600 ஏக்கர் அரசு நிலத்தை மந்திரி ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

600 ஏக்கர் அரசு நிலத்தை மந்திரி ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:–

600 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

கர்நாடகத்தில் கடந்த 4½ ஆண்டுகளில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை ஆதாரங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்துவேன். வீடு, வீடாக சென்று ஊழலுக்கான ஆதாரங்களை மக்களிடம் வழங்குவேன் என்று ஏற்கனவே நான் கூறி இருந்தேன். ஏனெனில் காங்கிரஸ் ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் தாண்டவமாடுகிறது.

சித்தராமையாவின் மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள ஒரு மந்திரி, 600 ஏக்கர் அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார். அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றியுள்ளார். பின்னர் அந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி பொதுமக்களுக்கு மந்திரி விற்பனை செய்துள்ளார். அந்த மந்திரி பெங்களூருவை சேர்ந்தவர். பெங்களூருவில் வெவ்வேறு இடங்களில் ஒட்டு மொத்தமாக 600 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்.

விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன்

அந்த மந்திரி யார்? என்பதை தற்போது சொல்ல முடியாது. அந்த மந்திரி சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்ததற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அந்த மந்திரி யார்? அவர் 600 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தது எப்படி? போன்ற ஆதாரங்களை வெளியிடுவேன்.

இதுபோன்று சித்தராமையா ஆட்சியில் நடந்த ஒவ்வொரு ஊழல் முறைகேடுகளையும் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். சித்தராமையா தனது ஆட்சியில் ஊழல் நடைபெறவில்லை என்று கூறி வருகிறார். அவரது ஆட்சியில் ஊழல் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story