செய்யாறு அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
செய்யாறை அடுத்த மோரணம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு,
செய்யாறை அடுத்த மோரணம் கிராமத்தில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டு கடையில் இறக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்தவுடன் வெம்பாக்கம் தாசில்தார் ஜி.பெருமாள், செய்யாறு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன், மோரணம் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அதிகாரிகள் மதுபாட்டில்களை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.