அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு உரம் ஏற்றுமதி செய்யப்படும் மத்திய மந்திரி அனந்தகுமார் பேச்சு


அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு உரம் ஏற்றுமதி செய்யப்படும் மத்திய மந்திரி அனந்தகுமார் பேச்சு
x
தினத்தந்தி 2 Sept 2017 2:30 AM IST (Updated: 2 Sept 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு உரம் ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் கூறினார்.

பெங்களூரு,

அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு உரம் ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் கூறினார்.

உரம் ஏற்றுமதி

பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்தில் நேற்று சங்கல்பதிந்த சித்தி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி அனந்தகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:–

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு உரம் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நமது நாட்டில் உரம் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மட்டுமே உரத்தை ஏற்றுமதி செய்கின்றன. அதே போல் அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு உரம் ஏற்றுமதி செய்யப்படும். அதன் மூலம் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேரும்.

உரம் கிடைக்கவில்லை

முன்பு தேவைக்கு ஏற்ப உரம் உற்பத்தி செய்யாததால், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் உரம் கிடைக்கவில்லை. இதனால் உணவு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. எங்கள் அரசு விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், நாட்டின் எந்த பகுதியிலும் உரம் பற்றாக்குறை பிரச்சினை ஏற்படவில்லை.

முந்தைய காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இயற்கை பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.33 ஆயிரத்து 580 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. எங்கள் அரசு இந்த தொகையை ரூ.61 ஆயிரத்து 621 கோடியாக அதிகரித்து உள்ளது. இது விவசாயிகள் மீது எங்கள் அரசுக்கு இருக்கும் அக்கறையை எடுத்துக் காட்டுகிறது.

நாட்டின் முன்னேற்றம்

மத்தியில் முந்தைய ஆட்சியில் இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 2011–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை ரூ.9,999 கோடி நிதி பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 2014–ம் ஆண்டில் இருந்து 2017–ம் ஆண்டு வரை ரூ.29 ஆயிரத்து 194 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பது பிரதமர் மோடியின் எண்ணம் ஆகும். 33 சதவீதம் அளவுக்கு பயிர்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலே நிவாரணம் வழங்க எங்கள் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்பு 50 சதவீத பயிர்கள் கருகினால் மட்டுமே விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைத்தது. 2020–ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மலிவு விலை மருந்து கடைகள்

முந்தைய ஆட்சியில் நாட்டில் 99 ‘ஜனரிக்‘ மலிவு விலை மருந்து கடைகள் தொடங்கப்பட்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 3 ஆண்டுகளில் 2,400 மருந்து கடைகளை தொடங்கியுள்ளோம். அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகா தலைநகரங்களிலும் இத்தகைய மலிவு விலை மருந்து கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அனந்தகுமார் பேசினார்.

மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை மந்திரி சதானந்தகவுடா பேசுகையில், “நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வறட்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வங்கிகள் குறைந்த வட்டியில் விவசாய கடனை வழங்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது“ என்றார்.


Next Story