‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடியின் உருவபொம்மையை எரித்த 11 பேர் கைது


‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடியின் உருவபொம்மையை எரித்த 11 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sept 2017 5:00 AM IST (Updated: 2 Sept 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்‘ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மோடியின் உருவபொம்மையை எரித்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

‘நீட்‘ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மோடியின் உருவபொம்மையை எரித்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வை (நீட்) ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், மாநில பாடத்திட்ட தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று, ‘நீட்‘ தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ‘நீட்‘ தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நேற்று மாலையில் கோவை காந்திபுரம் அரசு விரைவு பஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதற்கு அந்த கட்சி நிர்வாகி பாலசிங்கம் தலைமை தாங்கினார். பின்பு அவர்கள் திடீரென்று பிரதமர் மோடியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று, அவர்களிடம் இருந்த மோடியின் உருவ பொம்மையை பறித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (தேசிய மாணவர் இயக்கம்) சார்பில், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, மாநில செயலாளர் அ‌ஷரப் தலைமையில் நிர்வாகிகள் கோவை ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.

பின்பு அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர்கள் 14 பேரை கைது செய்தனர். இதில் மாவட்ட தலைவர் பீர்முகமது, மாவட்ட பொதுச்செயலாளர் அபுதாகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story