தாய் நாய் கண்முன்னே 5 குட்டிகளையும் துணி துவைப்பதுபோல் அடித்துக்கொன்ற கொடூரன்


தாய் நாய் கண்முன்னே 5 குட்டிகளையும் துணி துவைப்பதுபோல் அடித்துக்கொன்ற கொடூரன்
x
தினத்தந்தி 2 Sept 2017 5:30 AM IST (Updated: 2 Sept 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

தாய்நாய் கண்முன்னே கல்நெஞ்ச கொடூரன் ஒருவன் அதன் 5 குட்டிகளையும் அடித்தே கொன்றான். இறந்துகிடந்த தன் குட்டிகளை பார்த்து தாய்நாய் கண்ணீர் விட்டு பாசப்போராட்டம் நடத்தியது.

சிவகிரி,

நன்றிக்கு உதாரணமாகவும், காவலே கடமையாகவும் கொண்ட நாய்கள் வீட்டிலும், பங்களாக்களிலும் வாழ்ந்தால்தான் மரியாதை. தெருவோர நாய்களை மற்ற நாய்கள் கூட மதிப்பில்லை. தாய்ப்பாசம் மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்டு. ஆனால் பாசமும், நேசமும், மனிதாபிமானமும் ஏனோ மனிதர்களிடையேதான் குறைந்து வருகிறது. அதற்கு உதாரண சம்பவம் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நடந்துள்ளது.

சிவகிரி அருகே உள்ள காகம் கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு தெருநாய் 5 குட்டிகளை ஈன்றது. ரோட்டு ஓரமாக படுத்துக்கொண்டு தன்குட்டிகளை அடி வயிற்றில் பொத்தி பொத்தி 3 நாட்களாக பாலூட்டி பாசமாக கவனித்து வந்தது. குட்டி நாய்கள் இருக்கும் இடத்தின் அருகில், யாராவது மனிதர்கள் சென்றால் எங்கே தன் குட்டிகளை எடுத்து சென்றுவிடுவார்களோ? என்று குரைத்தபடி தாய்நாய் கடிக்க பாயும். இது நியாயமான கோபம்.

நேற்று காலை குட்டிகளுடன் தாய்நாய் படுத்து இருந்த இடம் வழியே ஒருவர் சென்றார். அவர் தன்குட்டிகளைத்தான் எடுத்துச்செல்ல வருகிறாரோ? என்று நினைத்து தாய்நாய் குரைத்தது. அந்த நபர் குடிபோதையில் இருந்தாரா? இல்லை சுயநினைவில் இருந்தாரா? என்று தெரியவில்லை. தன்னைப்பார்த்து இந்த தெருநாய் குரைத்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் ஒரு கம்பை எடுத்து தாய்நாயை விரட்டினார். பயந்துபோய் தன்குட்டிகளை விட்டு, சற்று தூரத்தில் தாய்நாய் சென்று நின்றுள்ளது. உடனே அந்த நபர் ஒரு கொடூரனாக மாறி 5 குட்டிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து அருகே இருந்த கல்லில் துணிதுவைப்பதுபோல் அடித்து கொன்றார். தான்ஈன்ற குட்டிகள் தன்கண்முன்னே கொல்லப்படுவதை பார்த்தாலும் ஒன்றும் செய்யமுடியாமல் குரைத்தபடி அருகே ஓடி வருவதும், அந்த நபர் கம்பால் தாய் நாயை விரட்டுவதுமாக இருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் நடந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. அதனால் அந்த பாவ சம்பவத்தை தடுக்க வழியில்லாமல் போனது.

இந்தநிலையில் செத்துக்கிடந்த தன் 5 குட்டிகளையும் பார்த்து கண்ணீர் விட்டபடி தாய்நாய் சுற்றிச்சுற்றி வந்தது. பொதுமக்கள் பரிதாபப்பட்டு அருகே சென்றாலும் யாரையும் அருகே நெருங்க விடாமல் குரைத்தது. நாயின் இந்த பாசப்போராட்டத்தை அந்த பகுதி பொதுமக்கள் நீண்டநேரம் நின்று பார்த்து அவர்களும் கண்ணீர் விட்டார்கள். பின்னர் சமாதானம் அடைந்த தாய்நாய் குட்டிகள் செத்துகிடந்த இடத்தில் இருந்து சற்று தூரம் போய் படுத்துக்கொண்டது. அதன்பின்னர் அந்த பகுதி மக்கள் 5 குட்டிகளையும் எடுத்து ஒரு இடத்தில் குழிதோண்டி புதைத்தார்கள். பிறகு பொதுமக்கள் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார்கள். ஆனால் தாய்நாய் மட்டும் தன்குட்டிகள் புதைத்த இடத்தை பார்த்துக்கொண்டே இருந்தது.

5 குட்டிகளையும் யார் அடித்துக்கொன்றது? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. ஒருவேளை தெரிந்தால் விலங்குகள் நல ஆர்வலர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கை.


Next Story