அவினாசி அருகே 2–வது நாளாக முற்றுகை போராட்டம்: டாஸ்மாக் கடையை மூடக்கோரி தீக்குளிக்க முயன்ற பெண்கள்
அவினாசி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2–வது நாளாக பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டாஸ்மாக் கடை அருகே உடலில் மண்எண்ணெய் ஊற்றி பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பாப்பாங்குளம் ஊராட்சி காசிலிங்கம்பாளையத்தில் நேற்று முன்தினம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–
இந்த பகுதியை சேர்ந்த பெண்களும், மாணவ–மாணவிகளும் டாஸ்மாக் கடை இருக்கும் வழியாகத்தான் சென்று வரவேண்டும். அப்போது அவர்கள், மதுப்பிரியர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். மேலும் மதுப்பிரியர்கள் மதுவை குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவார்கள். இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் திறந்த டாஸ்மாக் கடையை மூடுங்கள். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டரிடம் கடந்த மாதம் மனு கொடுத்தோம். அப்போது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் இது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதையடுத்து கலெக்டரிடம் சென்று மனு கொடுங்கள் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடைக்கு திரண்டு சென்று டாஸ்மாக் கடையை 2–வது நாளாக முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தில் பள்ளி மாணவ–மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் மாணவ–மாணவிகள் டாஸ்மாக் கடைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்து இருந்தனர். பின்னர் டாஸ்மாக் கடை அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொது பொதுமக்களுக்கும், மதுப்பிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து பொதுமக்களையும், மதுப்பிரியர்களையும் சமாதானம் செய்தனர்.
இதற்கிடையில் ஏற்கனவே கையில் மண்எண்ணெய் கேனுடன் தயாராக வந்து இருந்த 4 பெண்கள், திடீரென்று தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராகவும், டாஸ்மாக் கடையை மூடக்கோரியும் கோஷமிட்டவாரே தீக்குளிக்க முயன்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்து போலீசார் விரைந்து அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் மீண்டும் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் டாஸ்மாக் கடையை மூடும்வரை போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் கூறினார்கள். இதையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து முறையிடுவது என மாவட்ட கலெக்டரை சந்திக்க திருப்பூர் புறப்பட்டு சென்றனர். நேற்று 2–வது நாளாக டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.