சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே உள்ளது கரடிசித்தூர் கிராமம். இந்த கிராமத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மினிகுடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நிலத்தடி நீர் மட்டத்தின் குறைவு காரணமாக கரடிசித்தூர் கிராமத்தில் உள்ள முருகன் கோவில் பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
இதன்காரணமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் குடிநீருக்காக அருகில் உள்ள விளைநிலங்களுக்கும் குடியிருப்பு பகுதிக்கும் அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலையில் கச்சிராயப்பாளையம்–கரடிசித்தூர் சாலையில் உள்ள முருகன் கோவில் முன்பு காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் பகுதிக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது எங்கள் பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் சரிவர வருவதில்லை. இதனால் நாங்கள் குடிநீர் கிடைக்காமல் அல்லல்படுகிறோம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். பின்னர் போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.