கூலித்தொகை வழங்கக்கோரி சாலை மறியல்: 50 தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு
எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த சிலர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த சிலர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக கூலித்தொகை வழங்கப்படவில்லை எனத்தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக்கோரியும், புதிதாக நியமிக்கப்பட்ட பணித்தள பொறுப்பாளர் நியமனத்தை ரத்து செய்யக்கோரியும் கச்சிராயப்பாளையம்–எடுத்தவாய்நத்தம் சாலையில் எடுத்தவாய்நத்தம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார், கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 தொழிலாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.