‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இளைஞர்கள் சாலை மறியல்
‘நீட்’ தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட நிலையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இளைஞர்கள் பெண்ணாடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்,
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா(வயது 17). ‘நீட்’ தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, பேராடி வந்தார். இந்த நிலையில் பிளஸ்–2வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும், ‘நீட்’ தேர்வு காரணமாக இவருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் போனது. இதில் மனமுடைந்த இருந்த, இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த நிலையில், ‘நீட்’ தேர்வை ரத்து செய்£த மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பழைய பஸ்நிலையம் அருகே அப்துல்கலாம் லட்சிய பேரவை மற்றும் பெண்ணாடம் பகுதி இளைஞர்கள் சார்பில் நேற்று இரவு 8 மணிக்கு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொர்ந்து அவர்கள், அந்த பகுதியில் விருத்தாசலம்–திட்டக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று போலீசார் தெரிவித்ததை அடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோன்று விருத்தாசலம் பாலக்கரையில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு நகர செயலாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.