மும்பை, தானே, பால்கரில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 16 பேரின் உடல்கள் மீட்பு


மும்பை, தானே, பால்கரில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 16 பேரின் உடல்கள் மீட்பு
x
தினத்தந்தி 2 Sept 2017 3:36 AM IST (Updated: 2 Sept 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

மும்பை, தானே, பால்கரில் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மும்பை,

மும்பை, தானே, பால்கரில் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

பெருமழை

மும்பை, தானே மற்றும் பால்கர் ஆகிய பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை வரை மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் மும்பை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் வெள்ளக்காடாக மாறியன. இந்த மழை வெள்ளத்தால் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டது.

குறிப்பாக மும்பையில் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாம்பே மருத்துவமனை டாக்டர் தீபக் அம்ரபுர்கர் (வயது58) என்பவரின் உடல் நேற்று முன்தினம் கடலில் கரை ஒதுங்கியது. முன்னதாக பிரியம் மித்தியா(29) என்ற வக்கீலின் உடலும் மீட்கப்பட்டது. இவர்களோடு சேர்த்து மும்பையில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தானே

தானே மேற்கு, சம்பாஜிநகரை சேர்ந்தவர் கவுரி (வயது 14). பள்ளி மாணவியான இவள் கடந்த வியாழக்கிழமை வீட்டருகே தம்பியுடன் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது சிறுமி துரதிருஷ்டவசமாக மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாள். இவளை தேடு பணி தீவிரமாக நடந்து வந்தது.

இதேபோல் தானே கோரம் வணிகவளாகம் அருகே தீபாலி (27) என்ற பெண்ணும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். நேற்று முன்தினம் தானே கழிமுக பகுதியில் இவர்கள் 2 பேரின் உடல்களும் கண்டுபிடித்து மீட்கப்பட்டது. இவர்களுடன் சேர்த்து தானேயில் இதுவரை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதேபோல் பால்கரில் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதனால் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான தானே, பால்கரில் இதுவரை 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

தானே மற்றும் பால்கரில் இன்னும் 6 பேருக்கும் மேல் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமானதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story