நீதிபதி கிருபாகரன் தீர்ப்பை நிறைவேற்றி இருந்தால்...


நீதிபதி கிருபாகரன் தீர்ப்பை நிறைவேற்றி இருந்தால்...
x
தினத்தந்தி 2 Sept 2017 11:07 AM IST (Updated: 2 Sept 2017 11:07 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தாக்கல் தொடர்ந்திருந்த அரியலூர் மாணவி அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தாக்கல் தொடர்ந்திருந்த அரியலூர் மாணவி அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மாணவி அனிதாவின் மரணம் தங்கள் வீட்டில் ஒருவரை இழந்தது போன்ற மனவேதனையை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. மாணவ-மாணவிகள் மத்தியிலும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் முன்னெச்சரிக்கையுடன் தெளிவாக பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தி இருந்தால், மாணவி அனிதாவை நாம் இழந்து இருக்க மாட்டோம்.

கிருத்திகா என்ற மாணவி நீட் தேர்வு தொடர்பாக தொடர்ந்த வழக்கில், கடந்த மாதம் 24-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் தெளிவான உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

இலக்கை அடைய முடியவில்லை என்பதே ஒரு முடிவாகி விடாது. குழந்தைகளும், பெற்றோரும், ‘கடவுள் தங்களுக்கு எதிர்காலத்தில் வேறு ஏதாவது பெரிதாக வைத்திருக்கிறார், அதனால் தான் இந்த தவிர்க்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார் என்று உணர்ந்து கொள்ளவேண்டும்.

‘தோல்வி தான் வெற்றியின் படிக்கல்’ என்பதை மருத்துவக்கல்வியில் இடம் கிடைக்கவில்லை என்ற மனநிலையில் உள்ள மாணவி கிருத்திகா போன்ற மாணவர்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

மருத்துவ கல்லூரியில் இடம் கிடைப்பது தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டு, மாணவர்களோ, பெற்றோரோ தற்கொலை போன்ற தவறான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது.

உலகம் மிகவும் பெரியது. நிறைய வாய்ப்புகள் உண்டு. மருத்துவ கல்லூரியில் தான் இடம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் எதிர்காலத்தில் நடக்கும் ‘நீட்’ தேர்வுக்கு தங்களை நன்றாக தயார் படுத்திக்கொண்டு வெற்றிக்கரமாக தேர்வை எழுத வேண்டும்.

நிச்சயமாக மாணவர்களும், பெற்றோரும் விரக்தி அடைந்துள்ளனர். தங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை அடையமுடியவில்லை என்ற மாணவர்களின் வேதனையை ஐகோர்ட்டு புரிந்து கொள்கிறது. அவர்களில் யாரும் விபரீத முடிவை எடுத்துக்கொள்ளும் முன்பு, அவர்களுக்கும், பெற்றோருக்கும் ‘கவுன்சிலிங்’(உளவியல் ஆலோசனை) அளிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.

ஊடகங்கள் மூலமாக பிரபலமான சமூக ஆர்வலர்கள், நிபுணர்கள் போன்றவர்களை கொண்டு இத்தகைய குழந்தைகள் தவறான முடிவு எடுக்கக்கூடாது என்று ஆலோசனை கூறி அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

இதுதான் இன்றைய காலக் கட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாகும். எனவே இந்த ஐகோர்ட்டு கல்வியாளர்களுக்கும், சினிமா துறையில் உள்ளவர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் கவலையில் இருந்து மீண்டு வெளியே வரவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் ஆலோசனைகள் கூற வேண்டும்.

அரசியல் தலைவர்களும் இதை அரசியல் ஆக்காமல், மாணவர் களுக்கும், பெற்றோருக்கும் வேண்டுகோள் விடுத்து அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு கடந்த மாதம் 24-ந்தேதி நீதிபதி கிருபாகரன் வெளியிட்டுள்ள தீர்ப்பில் கூறியுள்ளார். இதை மட்டும் அரசும், கல்வியாளர்களும், சினிமா நட்சத்திரங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் நடைமுறைப்படுத்தி இருந்தால் மாணவி அனிதாவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது

- கடம்பூர் இடையர்காட்டார்

Next Story