சிவகாசியில் தொடர் மழை எதிரொலி: பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து
சிவகாசி பகுதியில் தொடர்ந்த பெய்து வரும் கனமழையால் வறண்டு கிடந்த பெரியகுளம் கண்மாய்க்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தற்போது சுமார் 600 அடிக்கும் கீழ் நீர் மட்டம் சென்று விட்டது. இதனால் வீடுகளில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வினியோகம் செய்யப்படும் தண்ணீரை கொண்டு பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள். சில இடங்களில் தண்ணீர் பிரச்சினை கடுமையாக உள்ளதால் அப்பகுதியில் உள்ளவர்கள் தேவையான குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சிவகாசி–ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள பெரிய குளம் கண்மாய் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் இந்த கண்மாயில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த கண்மாயை பா.ம.க. கட்சியை சேர்ந்த திலகபாமா முயற்சியில் ஒரு குறிப்பிட்ட பகுதி தூர்வாரப்பட்டு கண்மாயின் கரைகள் பலப்படுத்தப்பட்டது. இந்த கண்மாயிக்கு தண்ணீர் வரும் பாதைகளில் உள்ள அடைப்புகளை சரி செய்தால் மட்டுமே கண்மாயிக்கு தண்ணீர் வரும் நிலை இருந்தது. இதை தொடர்ந்து சிவகாசி நகரமன்ற முன்னாள் தலைவர் டாக்டர் கதிரவன் தொடங்கி உள்ள சமூக மேம்பாடு சுகாதார வழிப்புணர்வு இயக்கத்தினர் இந்த நீர் வரத்து பாதையை சரி செய்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிவகாசியில் தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வறண்டு கிடந்த பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால் கட்டளைபட்டி கிராமம் மற்றும் சிவகாசி நகராட்சி பகுதியில் உள்ள சில குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வர கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் முன்னாள் நகர மன்ற தலைவர் டாக்டர் கதிரவன் முயற்சியால் நீர் வரத்து பாதை செய்யப்பட்டதை மக்கள் பாராட்டினர். தொடர்ந்து இன்னும் சில நாட்கள் சிவகாசியில் மழை பெய்தால் பெரியகுளம் கண்மாய் நிரம்ப வாய்ப்பு ஏற்படும். அப்படி நிரம்பினால் சிவகாசியில் தண்ணீர் பிரச்சினைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கலாம். அதே போல் தொடர் மழை எதிரொலியாக விளம்பட்டி கண்மாய்க்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி–வெம்பக்கோட்டை ரோட்டில் உள்ள செண்பககுட்டி தெப்பத்துக்கு அதிகளவில் தண்ணீர் வந்து தெப்பம் நிரம்பி உள்ளது.