கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதா? போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி பதில்
கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி பதில் அளித்துள்ளார்.
சித்தராமையாவுடன் சந்திப்புகர்நாடக மந்திரிசபை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக 3 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றார்கள். அதே நேரத்தில் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த சில மந்திரிகளின் இலாகாக்களையும் முதல்–மந்திரி சித்தராமையா மாற்றினார். முன்னதாக போலீஸ் மந்திரி பதவியை கைப்பற்ற மந்திரிகள் டி.கே.சிவக்குமார், ரமாநாத் ராய் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கடைசி நேரத்தில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்த ராமலிங்க ரெட்டியை, போலீஸ் மந்திரியாக நியமித்து முதல்–மந்திரி சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், மந்திரி ராமலிங்க ரெட்டி நேற்று பெங்களூரு காவேரி இல்லத்தில் முதல்–மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசினார். அப்போது தன்னை போலீஸ் மந்திரியாக நியமித்ததற்காக மந்திரி ராமலிங்க ரெட்டி நன்றி தெரிவித்து கொண்டார். பின்னர் போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டியிடம் கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறி வருவது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–
பெண்களுக்கு உரிய பாதுகாப்புசட்டம்–ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது வழக்கமான ஒன்று தான். அது அவர்களது வேலை. ஆனால் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும்படி கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படவில்லை. சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படும் அளவுக்கு மாநிலத்தில் பெரிய அளவில் எந்த ஒரு சம்பவங்களும் நடைபெறவில்லை. போலீஸ் மந்திரியாக தற்போது தான் பதவி ஏற்றுள்ளேன். போக்குவரத்து துறை வேறு, போலீஸ் துறை வேறு என்பதை நன்கு அறிந்துள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
நான் போலீஸ் மந்திரியாக பதவி ஏற்றுள்ளதால், எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விதமான பாதுகாப்பும் தேவையில்லை. மாநில மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநில மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும் வழங்கப்படும். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க எல்லா விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை ஆகும்.
கெம்பையா மீது அதிருப்தி இல்லைதட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைதி திரும்ப ஏற்கனவே அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளது. அங்கு தொடர்ந்து அமைதி நிலவ வேண்டும் என்பதே எனது விருப்பம். போலீஸ் மந்திரியின் ஆலோசகர் கெம்பையா மீது எனக்கு அதிருப்தி எதுவும் இல்லை. அவர் நல்ல விதமான ஆலோசனைகளை வழங்கினால், அதனை ஏற்றுக் கொள்கிறேன்.
கெம்பையா மட்டும் அல்ல, போலீஸ் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் ஆலோசனை வழங்கினாலும் ஏற்றுக் கொள்வேன். எதிர்க்கட்சிகள் ஆலோசனை வழங்கினாலும், அதனையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.