மாணவி அனிதா தற்கொலை சம்பவம்: மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து, மத்திய, மாநில அரசை கண்டித்து தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
தேனி,
அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா பிளஸ்–2 தேர்வில் 1200–க்கு 1176 மதிப்பெண் எடுத்து இருந்தார். நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கிடைக்காததால் விரக்தி அடைந்த மாணவி, தனது மருத்துவ கனவு கலைந்து போனதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களும், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, கம்பம், உத்தமபாளையம், சில்லமரத்துப்பட்டி ஆகிய 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி தேனி பங்களாமேடு பகுதியில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கி பேசினார். வாலிபர் சங்கத்தின் தாலுகா தலைவர் பெத்தலீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
அதேபோன்று, தேனி நேரு சிலை முன்பு தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்துக்கு மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தலித்ராயன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மறியலின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.