மாணவி அனிதா தற்கொலைக்கு கண்டனம்: நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம் பகுதியில் போராட்டம்


மாணவி அனிதா தற்கொலைக்கு கண்டனம்: நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம் பகுதியில் போராட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2017 5:45 AM IST (Updated: 3 Sept 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதா தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம் பகுதியில் போராட்டம் நடந்தது.

நெய்வேலி,

‘நீட்’ தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடியவர் மாணவி அனிதா. இவர் மருத்துவ படிப்பில் சேர முடியாத வேதனையில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிற நிலையில், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில், நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் இளைஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். இதில் 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய தவறிய மத்திய–மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதேபோல் பண்ருட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி சக்திவேல், மாவட்ட இளைஞர் பாசறை அமைப்பாளர் வெங்கடசாமி, கிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் வாசன், கலியபெருமாள், பாபு, அஞ்சாபிரகாஷ், புஷ்பராஜ், சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரங்கிப்பேட்டை ஒன்றிய இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பு.முட்லூரில் கடலூர்–சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. மாணவர் சங்க ஒன்றிய தலைவர் ஆழ்வார், மாணவர் சங்க மாவட்ட தலைவர் குமாரவேல், ஒன்றிய செயலாளர் லெனின் மாணவர் சங்கம் மற்றும் வாலிபர் சங்க முன்னாள் நிர்வாகிகள் ரமேஷ்பாபு, வேல்முருகன், ஜெயசீலன் உள்பட 50–க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மறியலில் ஈடுபட்டதாக 26 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லிக்குப்பத்தில் அம்பேத்கர் சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆதித்தகரிகாலன் தலைமையில் அக்கட்சியினர் திடீரென உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாங்கள் அறவழியில் போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம், எங்களது போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து மாலை வரைக்கும் போராட்டம் செய்ய போலீசார் அனுமதித்தனர். ஆனால் மாலையில் இவர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ளாமல், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் வரையில் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர்.

பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் அங்கு வந்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story