கும்மிடிப்பூண்டி அருகே மின்னல் தாக்கி மாணவர் சாவு; 2 பேர் காயம்


கும்மிடிப்பூண்டி அருகே மின்னல் தாக்கி மாணவர் சாவு; 2 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Sept 2017 4:30 AM IST (Updated: 3 Sept 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவர் ஒருவர் பலியானார். மேலும் அங்கு இருந்த மாணவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். மைதானத்தில் விளையாடிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த காயலார்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமு. தொழிலாளி. அவரது மகன் கமலக்கண்ணன் (வயது12). இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார்.

விடுமுறை நாளான நேற்று பிற்பகல் அதே கிராமத்தில் உள்ள தேவாலயம் பின்புறம் உள்ள மைதானத்தில் சிறுவர்கள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் மாணவர் கமலக்கண்ணனும் விளையாடினார்.

அப்போது லேசான மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் இடி–மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. அந்த நேரத்தில் பயங்கர சத்தத்துடன் அப்பகுதியில் மின்னல் தாக்கியது. இதில் பள்ளி மாணவர் கமலக்கண்ணன் மீது மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார்.

மேலும் மின்னல் தாக்கியதில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் ஜெபராஜ்(23), அங்கு விளையாடிக்கொண்டிருந்த நாகலிங்கம் என்பவரது மகனான 6–ம் வகுப்பு பள்ளி மாணவர் தீத்து (11) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story