திருச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது


திருச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
x
தினத்தந்தி 3 Sept 2017 4:00 AM IST (Updated: 3 Sept 2017 3:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருச்சி,

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திருச்சி மாநகரில் மேக மூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து குளிர் காற்று வீசியது. பின்னர் மாலை 6 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சுமார் 15 நிமிடம் நீடித்தது. அதன் பிறகு லேசான தூறல் விழுந்து கொண்டே இருந்தது.

பின்னர் இரவு 8 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. அதன்படி இரவு 10 மணி வரை 2 மணி நேரம் கன மழை பெய்தது. தொடர்ந்து நள்ளிரவு வரை மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் திருச்சி தில்லை நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் தில்லை நகருக்கு பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதே போன்று மேலப்புதூர் சுரங்கபாதையில் மழை நீர் தேங்கியது. இதில் அந்த வழியாக சென்ற ஒரு தனியார் பஸ் சிக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் பத்திரமாக இறங்கி மழை நீரில் மெதுவாக நடந்து சென்று மாற்று வழியில் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். இதனால் சுரங்கப்பாதை வழியாக இரவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதே போன்று அய்யப்பன் கோவில் முன்புறம் உள்ள சாலை முழுவதும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலப்புதூர் தூய மரியன்னை ஆலயம், மாநகராட்சி அலுவலக சாலை ஆகிய இடங்களிலும் மழை நீர் அதிக அளவு தேங்கி போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. இதே போன்று திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்குள் மழை நீர் தேங்கியது. குறிப்பாக புதுக்கோட்டை, ராமேசுவரம் செல்லும் பஸ்கள் நிற்கும் இடம் முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் பஸ்கள் மிகவும் மெதுவாக மழை நீரில் நீந்தியபடி சென்றன. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

Next Story