நீலத்திமிங்கல விளையாட்டை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடாது


நீலத்திமிங்கல விளையாட்டை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடாது
x
தினத்தந்தி 4 Sept 2017 4:15 AM IST (Updated: 3 Sept 2017 11:58 PM IST)
t-max-icont-min-icon

பேரையூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் நீலத்திமிங்கல விளையாட்டு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அதில் நீலத்திமிங்கல விளையாட்டை இணையத்திலிருந்து யாரும் பதிவிறக்கம் செய்யக்கூடாது என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

பேரையூர்,

பேரையூர் போலீஸ்சரகத்திற்கு உள்பட்ட பேரையூர், டி.கல்லுப்பட்டி, அத்திபட்டி, சாப்டூர், சேடபட்டி, பெருங்காமநல்லூர், சின்னக்கட்டளை, பூசலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நீலத்திமிங்கலம் இணையதள விளையாட்டு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

பேரையூரில் நடந்த கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சார்லஸ் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் முன்னிலை வகித்தார். இதுபோல ஒவ்வொரு பள்ளியிலும், அந்தந்த தலைமை ஆசிரியர்கள் தலைமையில் பள்ளி கூட்டரங்கில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

ரஷ்யாவில் தொடங்கப்பட்ட நீலத்திமிங்கல இணையதள விளையாட்டு, நமது நாட்டிலும் பரவி எத்தனையோ மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மாணவர்களை முழுமையாக அடிமைப்படுத்தி அவர்களின் உயிர்களை பறிக்கும் இந்த விபரீத விளையாட்டினால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பது பற்றி கூட்டத்தில் பேசப்பட்டது.

இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு சார்லஸ் பேசும் போது கூறியதாவது:– மாணவர்களின் நடவடிக்கைகளை ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவனிக்கவேண்டும். சக மாணவர்களில் ஒருவர் தனிமைப்படுத்தும்படியாக இருந்தாலும், அவர்கள் மீது சந்தேகம் இருந்தாலும், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களை அந்த நிலையில் இருந்து உடனே மீட்டு சகஜநிலைக்கு மாற்றமுடியும்.

மேலும் நீலத்திமிங்கல விளையாட்டுகளை யாரும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடாது. அது சட்டப்படி தவறு, எனவே அப்படி யாரேனும் இருந்தாலும், தெரிந்தாலும், அருகிலுள்ள போலீஸ்நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் உங்கள் பொன்னான நாளையும், நேரத்தையும், படிப்பிற்காக செலவு செய்யுங்கள் இந்த விபரீத விளையாட்டில் யாரும் சிக்கி கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story