செங்கல்பட்டு அருகே சம்பள பாக்கியை கேட்ட கார் டிரைவர் குத்திக்கொலை


செங்கல்பட்டு அருகே சம்பள பாக்கியை கேட்ட கார் டிரைவர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 4 Sept 2017 2:30 AM IST (Updated: 4 Sept 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அருகே சம்பள பாக்கியை கேட்ட கார் டிரைவரை ‘ஸ்குரு டிரைவரால்’ குத்திக்கொலை செய்த செங்கல் சூளை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அருகே சம்பள பாக்கியை கேட்ட கார் டிரைவரை ‘ஸ்குரு டிரைவரால்’ குத்திக்கொலை செய்த செங்கல் சூளை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

சம்பளம் கொடுக்கவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி(வயது 58). இவர், சொந்தமாக செங்கல் சூளை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடம், செங்கல்பட்டு மேட்டுத்தெருவைச் சேர்ந்த முருகன்(40) என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நாராயணமூர்த்தி கடந்த 6 மாதங்களாக முருகனுக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

பலமுறை முருகன் சம்பள பாக்கியை தரும்படி கேட்டும் நாராயணமூர்த்தி பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

குத்திக்கொலை

நேற்று முன்தினம் இரவு டிரைவர் முருகன், தனது கார் உரிமையாளரான நாராயணமூர்த்தியின் வீட்டுக்கு சென்று அவரிடம் சம்பள பாக்கியை கேட்டு சண்டை போட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.

இதில் ஆத்திரம் அடைந்த நாராயணமூர்த்தி, வீட்டில் இருந்த ‘ஸ்குரு டிரைவரால்’ டிரைவர் முருகனின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

கைது

இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நாராயணமூர்த்தியின் மகளுக்கும், முருகனுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், இதில் ஏற்பட்ட தகராறிலேயே முருகனை அவர் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், செங்கல் சூளை உரிமையாளரான நாராயணமூர்த்தியை நேற்று கைது செய்தனர். மேலும் முருகன் கொலைக்கான உண்மையான காரணம் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story