புதுவையில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகை திருட்டு
புதுவை ரெயின்போ நகரில் டாக்டர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து, வீட்டில் இருந்த 40 பவுன் நகைகளை திருடிச் சென்றுவிட்டனர்.
புதுச்சேரி,
புதுவை ரெயின்போ நகரில் உள்ள வீடுகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். ரோந்து பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் நேற்று பட்டப்பகலில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அது பற்றிய விவரம் வருமாறு;–
புதுவை ரெயின்போ நகர் 8–வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது49). பல் டாக்டர். இவர் பாரதி வீதியில் கிளீனிக் நடத்தி வருகிறார். வீட்டில் தங்கவேலின் தாயார், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் உள்ளனர். இவர்களுடைய வீட்டில் வேலைக்காக 2 பெண் வேலையாட்கள் உள்ளனர்.
மேலும் தங்கவேல், அவருடைய மனைவி இருவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துறை தலைவர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் தங்கவேல் தனது குடும்பத்தாருடன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கோவிலுக்கு நேற்று காலை 7 மணிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மதியம் 1.30 மணியளவில் அனைவரும் புதுவை திரும்பினார்கள்.
வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் நாலாபுறமும் சிதறிக்கிடந்தது. வீட்டில் பின்பக்க கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து 40 பவுன் நகைகளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பெரியகடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்–இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
டாக்டர் தங்கவேல் வீட்டிற்கு அடுத்துள்ள 2 வீடுகளில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று விடுமுறை என்பதால் கட்டுமான பணிக்கு தொழிலாளர்கள் யாரும் வரவில்லை. இந்த நிலையில் தங்கவேல் வீட்டில் ஆட்கள் இல்லாததை உறுதி செய்த மர்ம ஆசாமிகள், கட்டுமான பணிகள் நடந்து வரும் வீடுகள் வழியாக அவருடைய வீட்டிற்கு பின்பக்கம் சென்றுள்ளனர். பின்னர் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று நகைகளை திருடிச்சென்றிருப்பது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.