இன்று, ஓணம் பண்டிகை: முதல்–அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து
ஓணம் பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி முதல்–அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
ஓணம் பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவையில் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள ஓணம் வாழ்த்து செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தன் நாட்டை சிறந்த முறையில் ஆண்டு வந்த மகாபலி மன்னன் தன்னாட்டு மக்கள் அனைத்து வளங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும். அதனை தாம் காண வேண்டும் என்று வேண்டிக்கொண்டதை மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்டு வரமளித்ததாகவும், அதனால் மலையாள புத்தாண்டு பிறப்பு மகாபலி மன்னன் பூமி வந்து தனது நாட்டையும், மக்களையும் பார்த்து செல்வதாக உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஓணம் திருநாளை கொண்டாடும் புதுச்சேரி மாநில மலையாள சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஓணம் திருநாளுக்கான மற்றொரு சிறப்பு, திருநாள் மதங்களை கடந்து மலையாள மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுவதாகும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற சாகாவரம் பெற்ற வார்த்தைகளுக்கு உரமிட்டு, மெய்பித்துக்காட்டும் இந்த கொண்டாட்டத்தில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுவை மாநிலத்தில் உள்ள மலையாள சமுதாயத்தினருக்கு அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்வும், சகோதரத்துவமும், மனிதநேயமும் தழைக்க வேண்டுமென்றும் இந்த திருவோண திருநாளில் மகிழ்கிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள ஓணம் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
வசந்தகால விழாவாக கொண்டாடப்படும் ஓணம் திருநாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவை போற்றப்பட வேண்டும். ஒவ்வொருவர் மனதிலும் உள்ள அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்படுகிறது. வளமை மற்றும் செழுமையின் அடையாளமாக கொண்டாடப்படும் இந்த ஓணம் திருநாள் புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைவரது இல்லங்களிலும் அனைத்து வளங்களையும், நலங்களையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும் என்று கூறி அனைவருக்கும், குறிப்பாக மாகி பிராந்திய மக்கள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
மலையாள மொழி பேசும் மக்களின் மகத்தான் திருநாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் வரலாற்று திருநாளாக ஓணம் திருநாள் தொன்றுதொட்டு மலையாள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஆவணி மாத திருவோணத்தில் ஆத்தப்பூ கோலமிட்டு மாவலி மன்னரை மனம் குளிர மகிழ்ச்சியுடன் வரவேற்கும் பாரம்பரிய மிக்க திருநாளாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பழமை மாறாமல் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்களுக்கு அனைவருக்கும் எனது மனப்பூர்வமான ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.