ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருக்க குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்


ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருக்க குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Sept 2017 6:30 AM IST (Updated: 4 Sept 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

நீல திமிங்கலம் போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருக்க குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நீல திமிங்கலம் விளையாட்டு பாதிப்பு தொடர்பாக காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒதியஞ்சாலை போலீசுக்கு நீல திமிங்கலம் விளையாட்டுக்கு வங்கி பெண் ஊழியர் ஒருவர் அடிமையானதாக அவரின் தோழி மூலம் தகவல் தெரியவந்தது.

உடனே போலீசார் தீவிரமாக செயல்பட்டு புதுவை கடற்கரையில் இருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவருக்கு உரிய உளவியல் ஆலோசனை வழங்கி மீட்டோம். அந்த பெண்ணின் கையில் வெட்டுக்காயங்கள் இருந்தது. அவருடைய பெற்றோருக்கும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி ஆகியோர் 2 மணி நேரம் உளவியல் ஆலோசனை வழங்கினர்.

அந்த பெண்ணின் வீட்டில் சோதனை செய்தபோது, நீல திமிங்கலம் விளையாட்டு தொடர்பாக ஓவியமும், ரஷிய மொழியில் எழுதப்பட்டிருந்த துண்டு காகிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். இளம்பெண்ணின் செல்போனை ஆய்வு செய்ததில் நீல திமிங்கலம் விளையாட்டை நடத்துபவர்கள் அந்த பெண்ணிடம் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து உத்தரவிட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த ஆபத்தான விளையாட்டுகளில் குழந்தைகள் ஈடுபடாமல் தடுக்க பெற்றோர் அவர்களை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் செல்போன்களில் மூழ்கி இருப்பது, மன அழுத்தத்துடன் காணப்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். போலீசார் உரிய ஆலோசனை வழங்குவார்கள். மேலும் கல்வி நிலையங்களின் நிர்வாகங்களிடம் இந்த விளையாட்டின் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நீல திமிங்கலம் விளையாட்டால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீட்ட போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்தி, காவலர் பாலமுருகன் ஆகியோருக்கு வெகுமதியும், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி போலீஸ் டி.ஜி.பி. பாராட்டினார்.


Next Story