விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது தகராறு இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல்; கல்வீச்சில் 3 வாலிபர்கள் காயம்
சிவமொக்கா டவுனில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
சிவமொக்கா,
சிவமொக்கா டவுனில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் 3 வாலிபர்கள் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிலை கரைப்பு ஊர்வலம்விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த மாதம்(ஆகஸ்டு) 25–ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது வீடு, கோவில்கள், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது. தற்போது அந்த விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிவமொக்கா டவுன் துங்காநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீராமநகர் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது மற்றொரு சமூகத்தினர் வாழும் தெருவழியாக ஊர்வலம் செல்ல அங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதனால் அங்கு 2 இருதரப்பினர் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதல் உருவானது. இதில் 2 பிரிவினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இச்சம்பவத்தினால் படுகாயம் அடைந்த உதயராவ்(வயது 16), கவுதம்(18), மஞ்சா(17) ஆகிய 3 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 பேர் கைதுஇந்த சம்பவம் குறித்து துங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேப்பகுதியை சேர்ந்த சபீர், முகமது சாதிக், தஸ்தகீர் ஆகிய 3 பேர் கைது செய்தனர். மேலும் இந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தகராறின்போது படுகாயம் அடைந்த 3 பேரை நேற்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக மாநில மேல்–சபை தலைவருமான ஈசுவரப்பா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும்போது பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்படி இருந்தும் இதுபோன்ற அசம்பாவித சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து போலீசார் முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வுமுன்னதாக சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரே பார்வையிட்டார். அப்போது கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அவர் போலீசாரிடம் கேட்டறிந்தார்.
மேலும் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் இனி நடைபெற வேண்டி விநாயகர் சிலை ஊர்வலத்தை வருகிற 6–ந் தேதிக்கு ஒத்திவைக்குமாறு இந்து அமைப்புகளிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரே கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.