குறைதீர்க்கும் கூட்டத்தில் பயிர் காப்பீடு, ரேசன் கார்டு மனுக்களுக்கு பதிலளிக்க புதிய ஏற்பாடு

வாரந்தோறும் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் பயிர் காப்பீடு, ரேசன் கார்டு மனுக்களுக்கு பதிலளிக்க புதிய ஏற்பாடு செய்து கலெக்டர் லதா உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்களில் இருந்தும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். மாவட்டத்தின் புதிய கலெக்டராக லதா கடந்த திங்கட்கிழமை பொறுப்பு ஏற்றார். அப்போது நடந்த கூட்டத்தில், இனிவரும் கூட்டங்களில் உரிய முறையில் பதில் அளிக்கும் வகையில் அந்தந்த அலுவலகத்தின் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் லதா உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய் அலுவலர் இளங்கோ, திட்ட அலுவலர் காஞ்சனா, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் திலீப்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இத்துடன் உயர் அதிகாரி இல்லாத நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொதுவாக கலெக்டர் அலுவலகத்தில பயிர் காப்பீடு மற்றும் ரேசன் கார்டு குறித்த மனுக்கள் அதிகம் வரும். எனவே இந்த முறை புதியதாக மனு கொடுக்க வருபவர்கள் மனு பதிவு செய்து கலெக்டரிடம் கொடுக்கும் முன்பு, சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அவரது மனு பற்றிய விவரம் தெரிந்து கொள்ள வசதியாக சிறப்பு ஏற்பாடு செய்ய கலெக்டர் லதா உத்தரவிட்டார். அதன்படி பயிர் காப்பீடு குறித்த விவரத்தை தெரிவிக்க கூட்டுறவுத்தறை அதிகாரிகள் கணினியுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் பயிர் காப்பீடு குறித்து மனு கொடுக்க வந்தவர்களிடம் அவர்களின் மனுவின் நிலை குறித்த விவரத்தை மனுவில் எழுதி கொடுத்து அனுப்பினர். இதேபோல் மாவட்ட வழங்கல் துறையில் இருந்து வந்த ஊழியர்களும் ரேசன் கார்டு கேட்டு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களின் விண்ணப்ப நிலை குறித்தும் கேட்டு அனுப்பினார்கள்.
பின்னர் கலெக்டர் லதா அதிகாரிகளிடம் கூறும்போது, பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையில்லாமல் அவர்களை அலைக்கழிக்க கூடாது என்றார்.