இன்றைய அரசியல் சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் சக்தி அ.தி.மு.க.வுக்கு இல்லை வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி
இன்றைய அரசியல் சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் சக்தி அ.தி.மு.க.வுக்கு இல்லை என்று கடலூரில் வசந்தகுமார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
கடலூர்,
காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு மாநில தலைவரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சி வளர்ச்சிக்குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி அவர் நேற்று கடலூரில் வர்த்தக பிரிவு நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். முன்னதாக கடலூர் டவுன்ஹால் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு வசந்தகுமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் குமார், மாநில சொத்து மீட்புக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சாந்திராஜன், வர்த்தக பிரிவு நகர தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து வசந்தகுமார் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தி விட்டு தான் தேர்வு வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டாக்டர் ஆகி விட வேண்டும் என்ற ஆசையில் நன்றாக படித்து பிளஸ்–2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அனிதா, நீட் தேர்வால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய அரசு அதிரடியாக அறிவித்து வரும் திட்டங்களால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தையும் மத்திய அரசு மீட்கவில்லை. அ.தி.மு.க.வில் 3 அணியாக இருந்தவர்கள், தற்போது 2 அணியாக உள்ளனர். தமிழகத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சியில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு சொல்வதை தான் மாநில அரசு கேட்கிறது.
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் மாநில அரசு திறந்து இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் இல்லாமலேயே ஆட்சியை நடத்தலாம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் சக்தி அ.தி.மு.க.வுக்கு இல்லை. உள்ளாட்சி தேர்தல் வந்தால் ஒரு பஞ்சாயத்தில் கூட அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது. தேர்தல் வந்தால், மக்களை, விவசாயிகளை அவர்கள் சந்திக்க வேண்டும். அப்போது அ.தி.மு.க.வின் தவறுகள் வெளிப்படும். இதனால் அவர்கள் தேர்தலை தள்ளி வைக்க முயற்சி செய்வார்கள். நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வரமாட்டார்கள்.
இவ்வாறு வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.