‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம், 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
நாகர்கோவிலில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்,
‘நீட்` தேர்வு பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும், மத்திய– மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்` தேர்வை ரத்து செய்யக்கோரியும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., நகர செயலாளர் வக்கீல் மகேஷ், மாவட்ட பொருளாளர் கேட்சன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வளர் அகிலன், மணிகண்டன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுக்கும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசால் தான் கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. கல்வியை பொதுப்பட்டியலில் சேர்த்ததால்தான் தமிழக அரசால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி, எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி உள்பட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசால் ‘நீட்’ தேர்வில் இருந்து விதிவிலக்கு பெறமுடியவில்லை.
மாணவி அனிதா மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு கிடைத்துவிடும் என்று கூறி, இறுதியில் விலக்கு பெற்றுத்தராமல் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து விட்டனர். தமிழகத்தின் மாநில உரிமைகளை தட்டிப் பறித்துவிட வேண்டும் என்று மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. எனவே தமிழக மாணவர்களின் நலன்கருதி மத்திய அரசு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 6 மருத்துவ கல்லூரிகளுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளித்ததுபோல தமிழகத்துக்கும் விலக்கு அளிக்க வேண்டும். அதை தமிழக அரசு பெற்றுத்தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தில்லைச்செல்வம், சி.என்.செல்வன், தாமரைபாரதி, மதியழகன், வக்கீல் உதயகுமார், குமரி ஸ்டீபன், சேக்தாவூது, எம்.ஜே.ராஜன், சுரேந்திரகுமார், பெஞ்சமின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.