நீட் தேர்வை ரத்து செய்ய கோரி 5 என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்ய கோரி 5 என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2017 5:45 AM IST (Updated: 5 Sept 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சமயபுரத்தில் 5 என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரரும் பங்கேற்றார்.

சமயபுரம்,

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை கொண்ட சம்பவம் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி விசாரணை வேண்டும் என்றும், உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர், சமயபுரம் பகுதியில் உள்ள 5 என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று காலை சமயபுரத்தில் உள்ள சுங்கச்சாவடி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்று மாணவர்களிடம் கூறினர். அதை தொடர்ந்து சமயபுரம் ஒத்தக்கடை அருகே மாணவ, மாணவிகள் ஒன்று கூட தொடங்கினர். காலை 10 மணியில் இருந்து ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் மாணவ, மாணவிகள் வர தொடங்கினர். சுமார் 500 பேர் வரை ஒன்று கூடிய பின்னர் அங்கு அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து கோ‌ஷங்களை எழுப்பினர். மாணவ, மாணவிகளின் ஆர்ப்பாட்டத்தையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டுகள் செட்ரிக் மேனுவெல், சீனிவாசன், கோவிந்தராஜன் ஆகியோர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஞானவேலன், பாலசந்திரன், தினேஷ்குமார் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் மாணவ– மாணவிகள் சாலையோரத்தில் நின்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி அனிதாவின் சகோதரர் அருண்குமாரும் கலந்து கொண்டார். அவர் எதுவும் பேசாமல் மவுனமாகவும், சோகமான முகத்துடனும் அமர்ந்திருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் தேவ்பிரசாத் என்பவர் கூறுகையில், தமிழ்நாட்டை பொருத்தவரை 1½ சதவீத மாணவ, மாணவிகளே மத்திய பாடத்திட்டத்தில் படிக்கின்றனர். மீதியுள்ள 98½ சதவீத மாணவர்கள் சமச்சீர் கல்வி முறையில் பயின்று வருகின்றனர். பெரும்பான்மையான மாணவ, மாணவிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் மாணவர்களின் போராட்டம் தீவிரமடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story