தொடர் கனமழை எதிரொலி: வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் பெங்களூரு


தொடர் கனமழை எதிரொலி: வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் பெங்களூரு
x
தினத்தந்தி 5 Sept 2017 5:34 AM IST (Updated: 5 Sept 2017 5:34 AM IST)
t-max-icont-min-icon

தொடர் கனமழையால் பெங்களூரு நகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த மழையால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

தொடர் கனமழையால் பெங்களூரு நகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த மழையால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

பெங்களூரு கடந்த 5 நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றுள்ளது. கால்வாய்களை ஒட்டியுள்ள பகுதியில் மழைநீருடன் சாக்கடை நீரும் குடியிருப்புகளில் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கிறார்கள். நகரில் பல சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. எச்.எஸ்.ஆர்.லே–அவுட், காக்ஸ் டவுன், அல்சூர் உள்ளிட்ட பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம்(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு கனமழை பெய்தது. விடியற்காலை வரை இந்த மழை நீடித்தது. இதனால் ஹெப்பால், தனிசந்திரா, லால்பாக், சாங்கி–டாங்கி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிகிறது. அதில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறி அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்தது. எச்.எச்.ஆர். லே–அவுட் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வீடுகளில் புகுந்த மழைநீரை அவற்றின் உரிமையாளர்கள் வாளி மற்றும் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். சாலைகளில் நீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் நேற்று மெஜஸ்டிக், ரிச்மண்ட் சர்க்கிள், ஜே.சி.ரோடு, வாட்டாள் நாகராஜ் ரோடு, கே.ஆர்.புரம், பொம்மனஹள்ளி, பன்னரகட்டா ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். அலுவலகங்களுக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பெங்களூருவில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அல்சூர் பகுதியில் மழைநீரில் வாகனங்கள் மூழ்கின. பல்வேறு பகுதிகளில் மழைநீர் இன்னும் முழுமையாக வடியாமல் இருப்பதால் அந்தப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். இந்த தொடர் கனமழையால் பெங்களூரு நகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறுகையில், “பெங்களூருவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகள் பழுதாகியுள்ளன. மழை நின்ற பிறகு அந்த சாலைகள் சரிசெய்யப்படும். புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் எந்த பிரச்சினையும் இல்லை. சாலைகளை மேம்படுத்த முதல்–மந்திரி சித்தராமையா ரூ.800 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்“ என்றார்.

Next Story