ஆண்டிப்பட்டியில் ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் மாணவனுக்கு கை எலும்புமுறிவு தந்தை போலீசில் புகார்
ஆண்டிப்பட்டியில் சிறப்பு வகுப்புக்கு வராததால் ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் பள்ளி மாணவனின் கையில் எலும்புமுறிவு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி என்பவரின் மகன் ரஞ்சித்குமார் (வயது 12). சக்கம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் நடைபெற்ற கணினி சிறப்பு வகுப்புக்கு ரஞ்சித்குமார் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
மறுநாள் பள்ளிக்கு சென்ற போது கணினி ஆசிரியர் வேலுச்சாமி என்பவர் சிறப்பு வகுப்புக்கு வராத ரஞ்சித்குமாரை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவனுடைய வலது முழங்கையில் அதிகமான வலி ஏற்பட்டது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் அவன் கூறியுள்ளான். இதனையடுத்து அவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுடைய கையில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறினர்.
உடனே அந்த மாணவனை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் ரஞ்சித்குமாரின் பெற்றோர் புகார் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவனின் தந்தை பால்பாண்டி ஆண்டிப்பட்டி போலீசில், ஆசிரியர் வேலுச்சாமி மீது புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.