நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: வைகை அணை நீர்மட்டம் 33 அடியாக உயர்வு


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: வைகை அணை நீர்மட்டம் 33 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 33 அடியாக உயர்ந்துள்ளது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, பொம்மராஜபுரம், இந்திராநகர், அரசரடி, மேகமலை, காந்திகிராமம் உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 218 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் கம்பம் சுருளியாறு, கொட்டக்குடி ஆறுகளிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் வைகை அணைக்கான நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது.

வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. கடந்த ஒரு ஆண்டாக நீர்மட்டம் 25 அடிக்கும் குறைவாக காணப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் நிலையில் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி, வைகை அணையின் நீர்மட்டம் 33 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து மதுரை மாநகராட்சி மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 40 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 501 மில்லியன் கனஅடியாக காணப்பட்டது..


Next Story