புழல் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது புதர்மண்டி கிடக்கும் உபரி நீர் வெளியேறும் கால்வாயை சீரமைக்க கோரிக்கை


புழல் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது புதர்மண்டி கிடக்கும் உபரி நீர் வெளியேறும் கால்வாயை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 6 Sept 2017 3:45 AM IST (Updated: 6 Sept 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை எதிரொலியால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

செங்குன்றம்,

ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாய் புதர்மண்டி கிடக்கிறது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரியாகும். இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடியாகும். (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்). கடந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாததால் ஜூலை மாத முடிவில் ஏரி முற்றிலுமாக வறண்டு போனது.

இதனால் சென்னை நகருக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கியது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியது. இதன்காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர்களில் இருந்து புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. நேற்றைய நிலவரப்படி 117 மில்லியன் கனஅடி கொள்ளளவு தண்ணீர் ஏரியில் இருப்பு உள்ளது.

மேலும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து பருவமழை பெய்தால் 3,300 மில்லியன் கனஅடி கொண்ட ஏரி முழுமையாக நிரம்பிவிடும். ஏரி முழுமையாக நிரம்பிவிட்டால் கரையின் பாதுகாப்புகாக உபரிநீர் 2 ‌ஷட்டர்கள் மூலம் திறந்து விடப்படும். திறந்து விடப்படும் உபரிநீர் கால்வாய் வழியாக வடகரை கிரண்ட்லைன், வடபெரும்பாக்கம், சடையங்குப்பம், வழியாக எண்ணூர் கடலுக்கு சென்றடையும்.

இந்த உபரிநீர் செல்லும் கால்வாய் முழுவதும் ஆகாய தாமரைசெடிகள் வளர்ந்தும், மணல் திட்டுகளாலும் புதர் மண்டி உள்ளது. உபரிநீர் கால்வாய் இருப்பதற்கான அடையாளமே தெரியாத அளவுக்கு புதர் மண்டி கிடக்கிறது.

புழல் ஏரி நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டால் உபரிநீர் செல்லும் கால்வாயில் புதர் மண்டி கிடப்பதால் அந்த தண்ணீர் கால்வாயில் செல்லாமல், அந்த பகுதியில் உள்ள 50–க்கும் மேற்பட்ட குடியிருப்பு கிராமங்களில் பாயும் நிலை உள்ளது. எனவே அப்படி ஒரு சூழ்நிலை உருவானால் அந்த பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணிதுறை அதிகாரிகள் இந்த உபரிநீர் செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Related Tags :
Next Story