நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பெரம்பலூர்-துறையூர் ரோட்டிலுள்ள தனியார் கல்லூரி உள்ளிட்டவற்றில் படிக்கும் மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி ஊர்வலமாக புறப்பட்டு பெரம்பலூரை நோக்கி வந்தனர். பின்னர் பெரம்பலூர் பாலக்கரை ஆர்ச் பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் மாணவர்களின் கவனத்தை திசை திருப்பி வஞ்சித்து விட்டதால் தான் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் அரியலூர் மாணவி உயிர்நீத்தார் என குற்றம் சாட்டினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் மாணவர்கள் அதற்கு செவி சாய்க்காமல் அங்கேயே அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இந்த போராட்டத்தின் போது மாணவர்களுடன் அமர்ந்திருந்த பெரம்பலூர் டாக்டர் ஒருவர், அரசு நிதியை வாங்க மறுத்த அனிதா குடும்பத்துக்கு வீரவணக்கம்... என கோஷமிட அதனை மாணவர்கள் திரும்பி கூறி ஆர்ப்பரித்தனர். மேலும் நீட் தேர்வின் பாதிப்புகளை சுட்டி காட்டி பதாகைகளை கையில் ஏந்தியபடியும் மாணவர்கள் இதில் பங்கேற்றதை காண முடிந்தது. இதனால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இது மாறிவிடுமோ என போலீசாருக்கு கலக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையே அந்த டாக்டரை போராட்டத்தில் இருந்து வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அப்போது அந்த நபர், காவல்துறையை சேர்ந்த பிள்ளைகளுக்கும் சேர்த்து தான் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அடக்கு முறையை கையாள வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்தார். எனினும் அந்த நபருக்கு ஆதரவாக மாணவர்கள் இருந்தனர். இதே போல் ஒருசிலர் மாணவர்களுக்கு ஆதரவாக வும் வந்து போராட்டத்தில் உட்கார்ந்தனர். அப்போது, அரசியல் கட்சிகள் யாரும் இங்கு அமர வேண்டாம். தனிமனிதனாக நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்கிற ஒருமித்த கருத்தை வலியுறுத்தி மட்டும் ஆதரவு தாருங்கள். இந்த போராட்டத்தை அரசியலாக்கிவிடாதீர்கள் என மாணவர் அமைப்பினர் கூறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து நீட் தேர்வினால் தமிழக மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீட் தேர்வு விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்கள் ஒவ்வொருவராக பேசினர். அப்போது, அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனில் நீட் தேர்வு விலக்கு ஒன்றே வழியாகும். இன்னும் எத்தனையோ அனிதாக்கள் நீட் தேர்வு பாதிப்புக்கு ஆளாகி யிருக்கின்றனர். அவர்களை காப்பாற்ற வேண்டும். தமிழகத்தில் இதற்கு முன்னர் மருத்துவம் படித்து டாக்டர் ஆனவர்கள், சளைக்காமல் அந்த துறையில் சாதித்து வருகின்றனர். அப்படி இருக்கையில் தமிழக மாணவர்களின் திறமையை பதம் பார்க்க நீட் தேர்வு அவசியம் இல்லை என தங்களது கருத்துக்களை மாணவர்கள் தெரிவித்தனர். இதற் கிடையே கல்லூரி நிர்வாகத்தினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் பள்ளி சீருடையில் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அப்போது போலீசார் அவரிடம் விசாரித்த போது, நீட் என்கிற பொதுப்பிரச்சினையில் மாணவர்களின் போராட்டத்தை உற்றுநோக்கி அவர்களுக்கு ஆலோசனை வழங்க வந்திருப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் போராட்டத்தில் மாணவர்களுடன் அமர்ந்தார். இதற்கிடையே ஜல்லிகட்டு போராட்டத்தில் பிரபலமான ஒரு மாணவரும் அங்கு வந்து உட்கார்ந்தார். இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்து ஆர்ப்பரித்தனர். அப்போது அங்கு நின்ற போலீசார் மெரினா கடற்கரை ஜல்லிக்கட்டு போராட்ட இறுதியில் விஷமிகள் புகுந்து போர்க்களமாக மாறியதை மறந்துவிடாதீர்கள். உங்களது பாதுகாப்பு மிக முக்கியம். எனவே வீட்டிற்கு சென்று விடுங்கள் என்றனர். ஆனால் அதனை மாணவர்கள் கண்டுகொள்ளவில்லை. பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தேவராஜ், மலர்கொடி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கபிலன், மாரிமுத்து, ஆரோக்கியசாமி, பெரியசாமி உள்பட போலீசார் தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் பெரம்பலூர் தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நீட் தேர்வு குறித்த கோரிக்கை மாநில அரசுக்கு எடுத்துரைப்போம் என கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்கள் ஒன்று கூடி மாநில அரசு நடவடிக்கை பொறுத்து அடுத்தகட்ட போராட்டம் நடத்துவோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story