6 ஆண்டுக்கு பிறகு பலத்தமழை எதிரொலி: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு பார்க்க திரண்ட பொதுமக்கள்


6 ஆண்டுக்கு பிறகு பலத்தமழை எதிரொலி: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு பார்க்க திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 5 Sep 2017 10:30 PM GMT (Updated: 2017-09-06T00:56:14+05:30)

6 ஆண்டுக்கு பிறகு பெய்த பலத்த மழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

திருப்பூர்,

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு திருப்பூர் மாநகரின் மையப்பகுதி வழியாக செல்கிறது. மழை பெய்தால் மட்டுமே நொய்யல் ஆற்றில் மழைநீர் ஓடும். மற்ற காலங்களில் சாக்கடை நீர் மற்றும் சாயக்கழிவு நீர் மட்டுமே பாய்ந்து வருகிறது. ஒரு காலத்தில் மாநகருக்கு அழகு சேர்த்து, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த நொய்யல் ஆறு இப்போது கழிவுநீர் கால்வாயாக மாறி விட்டது.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்போது இந்த நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். கடந்த காலங்களில் மழை பொழிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பாயவில்லை. கடந்த ஒரு வாரமாக திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது. நள்ளிரவில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரக்கிளைகள் முறிந்து சாலைகளில் விழுந்தன. இதன்காரணமாக இரவு 12 மணிக்கு மேல் மாநகரின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

நேற்று அதிகாலை 3 மணிக்கு மேல் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 4 மணிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈஸ்வரன் கோவில் அருகில் உள்ள பாலத்தின் மேல்பகுதியை தொட்டபடி மழைநீர் வெள்ளம் சென்றது. ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் பாய்ந்தது. நேற்று காலை மாநகர மக்கள் நொய்யல் ஆற்றில் பாய்ந்த வெள்ளத்தை ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.

கடந்த 2011–ம் ஆண்டு இதுபோல் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதில் 9 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார்கள். 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை மக்கள் பார்வையிட்டதுடன் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டனர்.

நொய்யல் ஆற்றில் பாய்ந்த வெள்ள காட்சிகளை வீடியோ எடுத்த இளைஞர்கள் வாட்ஸ்அப் மூலம் தங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர். வளர்மதி பாலம், வளம் பாலம், ஈஸ்வரன் கோவில் பாலம் பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு நின்று வெள்ளத்தை வேடிக்கைபார்த்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தி விட்டு வெள்ளத்தை பார்க்க திரண்டனர். இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அங்கிருந்தவர்களை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்று நீர் மங்கலம் பகுதியில் உள்ள நல்லம்மன் தடுப்பணை வழியாக வருவதால் அணை நிரம்பியது. இதனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அணை நிரம்பி வழிகிறது. அத்துடன் அணைக்குள் இருந்த நல்லம்மன் கோவிலும் வெள்ள நீரில் மூழ்கியது.

நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரை அணையின் மதகுகள் வழியாக ஆண்டிப்பாளையம் குளத்திற்கு செல்ல ஏற்பாடு செய்தால் அந்த பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்பது அந்த பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு நல்லம்மன் அணை நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுபோல் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. நேற்று காலை 7 மணி வரை பெய்த மழை அளவுப்படி திருப்பூரில் 57 மில்லி மீட்டரும், அவினாசியில் 37 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 48 மில்லி மீட்டரும், காங்கேயத்தில் 118 மில்லி மீட்டரும், தாராபுரத்தில் 22 மில்லி மீட்டரும், மூலனூரில் 40 மில்லி மீட்டரும், உடுமலையில் 15.40 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

கனமழை காரணமாக சாமளாபுரம் குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று மாலையில் குளம் நிரம்பும் நிலையில் காணப்பட்டது. இதுபோல் பள்ளபாளையம் குளம், சின்னாண்டிப்பாளையம் குளம், வேட்டுவபாளையம் குளம், மாணிக்காபுரம் குளம், செம்மாண்டம்பாளையம் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்ததை தொடர்ந்து கரையோரம் குடியிருப்பவர்களுக்கு அந்தந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரிகள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளை கண்காணித்தனர்.

நொய்யல் ஆற்றில் நேற்று அதிகாலை 4 மணி முதல் வெள்ளம் அதிகரித்தது. சிறிது நேரத்தில் ஆற்றின் கரையோரம் ராயபுரம் அணைமேடு பகுதியில் உள்ள 6 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் வந்ததால் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக பாதுகாப்புடன் வெளியேறினார்கள். இதுபோல் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள 3 வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. அங்கிருந்தவர்களும் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினார்கள். பின்னர் 9 குடும்பத்தினருக்கும் நேற்று காலை உணவு வசதி செய்து கொடுக்கப்பட்டது. நேரம் செல்ல செல்ல வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் வடிந்தது. அதன்பிறகு அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று மழைநீரை முற்றிலுமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமானது.

இதுபோல் மழை வெள்ளம் காரணமாக யுனிவர்செல் ரோட்டோரம் உள்ள நொய்யல் ஆற்றின் கரை சுவர் 20 அடி நீளத்துக்கு சரிந்து விழுந்தது. அதை வடக்கு தாசில்தார் பார்வையிட்டு கரையை பலப்படுத்துவதற்கான பணிகளை முடுக்கி விட்டார்.


Next Story