கல்குவாரிகளை மூடவலியுறுத்தி கிராம மக்கள் தர்ணா போராட்டம்
பாலமேடு அருகே கல்குவாரிகளை மூட வலியுறுத்தி கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அலங்காநல்லூர்,
பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி செல்லும் சாலை பிரிவு ரோட்டில் பாலமேடு மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் திடீர் காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாலமேடு பகுதியில் உள்ள கல்குவாரிகளில் கல் உடைக்கும் போது அதிர்வுகள் ஏற்படுவதாகவும் இதனால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாகவும். கல்குவாரிகளால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
எனவே இந்த பகுதிகளில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் மூடவேண்டும் என்பதை வலியுறுத்தி ஏராளமான ஆண்கள், பெண்கள் சாலையின் ஓரத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 3 வாலிபர்கள் அருகில் உள்ள சங்குசுனை மலையின் மீது ஏறி நின்று மாவட்ட நிர்வாகம் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோஷமிட்டபடி பேராட்டம் நடத்தினர்.
இதை போலவே பாலமேடு அருகே உள்ள 66.மேட்டுப்பட்டி பெருமாள்மலை பகுதியில் புதிதாக கல்குவாரி நடத்த அரசு அனுமதி வழங்கக்கூடாதென்று கிராம மக்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட 2 வாலிபர்கள் அருகில் உள்ள தொலைபேசி கோபுரத்தில் ஏறி பெருமாள்மலை பகுதிக்கு கல்குவாரி அமைக்க அரசு அனுமதி தரக்கூடாது, இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துராம், வருவாய் துறை அதிகாரிகள் வனிதா, கமலேஷ் மற்றும் அலுவலர்கள் செல்போன் டவரில் ஏறியவர்களிடமும், சங்குசுனை மலை மீது ஏறியவர்களிடமும் சமரசம் செய்து கீழே இறங்க வைத்தனர். இதையொட்டி மாணிக்கம்பட்டி பிரிவு பகுதி, 66.மேட்டுப்பட்டி பெருமாள்மலை பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.