தஞ்சையில் கண்தான விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


தஞ்சையில் கண்தான விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Sep 2017 10:30 PM GMT (Updated: 5 Sep 2017 9:42 PM GMT)

தஞ்சையில் நடந்த கண்தான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் 32-வது தேசிய கண் தான இருவார விழா வருகிற 8-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கண்தான விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள், பயிற்சி செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் ஏந்தியவாறும், இருக்கும் வரை ரத்ததானம், இறந்த பின் கண்தானம், மண்ணுக்கு போகும் கண்களை மனிதருக்கு கொடுத்து உதவுவோம், தானத்தில் சிறந்தது கண் தானம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் பொது மக்களிடம் கண்தானத்தை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

கண்தானம் செய்தவருக்கு பாராட்டு

பேரணி தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி சோழன்சிலை வழியாக மேலவீதி, தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம் வழியாக மீண்டும் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையை வந்தடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர் ஞானசேகர், டாக்டர்கள், செவிலியர்கள், பார்வையிழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story