தமிழக என்ஜினீயரை காதலித்து மணந்த இந்தோனேஷிய பெண் மர்ம சாவு தூக்கில் பிணமாக தொங்கினார்


தமிழக என்ஜினீயரை காதலித்து மணந்த இந்தோனேஷிய பெண் மர்ம சாவு தூக்கில் பிணமாக தொங்கினார்
x
தினத்தந்தி 7 Sept 2017 4:45 AM IST (Updated: 6 Sept 2017 11:12 PM IST)
t-max-icont-min-icon

தமிழக என்ஜினீயரை காதலித்து மணந்த இந்தோனேஷிய நாட்டை சேர்ந்த பெண், வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே பொன்மனையை சேர்ந்தவர் ராஜசேகரன் நாயர். அவருடைய மகன் சுபாஷ் (வயது 31). என்ஜினீயரான இவர் கடந்த 2015–ம் ஆண்டு இந்தோனேஷிய நாட்டுக்கு வேலைக்கு சென்றார்.

அப்போது அந்த நாட்டை சேர்ந்த பெர்தாமியா வர்தாநியா (25) என்ற பெண்ணுக்கும், சுபாசுக்கும் காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காதலருடன் அந்த பெண் இந்தியாவுக்கு வந்தார்.

இருவீட்டாரின் சம்மதத்துடன் அதே வருடத்தில் இருவரும் குலசேகரத்தில் உள்ள ஒரு கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு இருவரும் இந்தோனேஷியாவில் வசித்து வந்தனர். இதற்கிடையே பெர்தாமியாவின் நடத்தை மீது சுபாசுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சுபாஷ், சொந்த ஊருக்கு வந்தார். இதனை தொடர்ந்து பெர்தாமியாவும் கணவரை பார்ப்பதற்காக பொன்மனையில் உள்ள வீட்டுக்கு வந்து தங்கினார். நேற்று காலையில் சுபாஷின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். இதனால் வீட்டில் சுபாசும், பெர்தாமியாவும் மட்டும் இருந்தனர். மதியத்திற்கு பிறகு சுபாசும் வெளியே சென்றதாக தெரிகிறது.

அதன்பின்பு வீட்டுக்கு சுபாஷ் வந்தார். அங்கு பெர்தாமியா மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அசைவற்று கிடந்தார். உடனே அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தூக்கில் தொங்கிய பெர்தாமியாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், பெர்தாமியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார், பெர்தாமியாவின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, பெர்தாமியா மர்ம சாவுக்கான காரணம் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த பின்புதான் தெரியவரும். இதுதொடர்பாக அவருடைய கணவர் சுபாஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.


Next Story