சென்னை விமான நிலையத்தில் பெண் என்ஜினீயரை கிண்டல் செய்த கேரள வாலிபர்கள்
சென்னை விமான நிலையத்தில் பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயரை 3 கேரள வாலிபர்கள் கிண்டல் செய்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்
ஆலந்தூர்,
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆஷா (வயது 27) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் டெல்லியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இதற்காக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்ல நேற்று முன்தினம் இரவு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வந்தார்.
பின்னர் காத்திருப்பு அறையில் அமர்ந்து இருந்தார். இவரது இருக்கைக்கு அருகே இருந்த 3 வாலிபர்கள், ஆஷாவை மலையாளத்தில் ஆபாசமாக கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த ஆஷா விமான நிலைய உதவி மையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து விமான நிலைய போலீசார் விரைந்து வந்து கேரள மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்களையும், பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கொல்லத்தை சேர்ந்த நியாஸ் (28), நஷீப் (26), அமீர் (26) என்பதும், தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து வரும் 3 பேரும் கொச்சி செல்வதற்காக காத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரின் விமான பயணத்தை போலீசார் ரத்து செய்தனர். 3 பேரும் தங்களை மன்னித்துவிடும்படி கேட்டனர். இதற்கிடையே ஆஷா, தனது குடும்பத்தினருடன் டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர், பெண்ணை கிண்டல் செய்ததாக 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர்.