விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம், தசரதபுரம், காவேரி ரங்கன் தெருவை சேர்ந்தவர் சந்திரவாசன். இவர், சினிமா துறையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் திவ்யா(வயது 19), கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் திவ்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து பக்கத்து வீட்டில் வசிப்பவர் திவ்யாவின் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
அப்போது, அந்த வீட்டின் அறையில் திவ்யா தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து திவ்யாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் திவ்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், திவ்யா வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனால் விரக்தி அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவருடைய தற்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்