‘அ.தி.மு.க. ஆட்சியையோ, கட்சியையோ யாராலும் அழிக்க முடியாது’ ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
அ.தி.மு.க. ஆட்சியையோ, கட்சியையோ யாராலும் அழிக்க முடியாது என்று ஈரோட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஈரோடு,
ஈரோட்டில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:–
பெண்களை மிகவும் மதித்தவர் எம்.ஜி.ஆர். அவர், அனைத்து பெண்களையும் தாயாக பாவித்தார். ஒரு முறை எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்தார். இடைவேளையில் ஒரு பெண் கையில் குழந்தையுடன் வந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து கண்ணீர் விட்டார்.
கணவரை இழந்த அந்த பெண் உணவுக்கே கஷ்டப்படுவதாக கூறினார். உடனடியாக எம்.ஜி.ஆர். அவரது உதவியாளரை அழைத்து அந்த பெண்ணை அவரது அலுவலகத்தில் கொண்டு உட்காரச்செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி உதவியாளரும் செய்தார்.
சிறிது நேரம் சென்றபின், எம்.ஜி.ஆர் அலுவலகத்துக்கு வரும் நேரம். உதவியாளர் உள்ளே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்.
அந்த அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். தனது தாயார் சத்யாவின் முழு உருவப்படத்தை வைத்து, அதன் முன்பு அவருடைய ஆசனத்தை வைத்திருப்பார். தினமும் அம்மாவை வணங்கிவிட்டு அந்த இருக்கையில் உட்காருவது வழக்கம். அவரைத்தவிர வேறு யாரும் அதில் உட்காருவது இல்லை.
ஆனால், அறையில் உட்கார வைத்த பெண், அதில் உட்கார்ந்து வியர்வை வழிந்து கொண்டே அசதியில் தூங்கிக்கொண்டு இருந்தார். அதைப்பார்த்த உதவியாளர் அதிர்ச்சியில் நின்றார்.
அதேநேரம் எம்.ஜி.ஆரும் உள்ளே வந்தார். அவர் அந்த பெண் அசந்து தூங்குவதை பார்த்து சிரித்துக்கொண்டே, மின்விசிறியை போட்டு விட்டார். பின்னர் அங்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை எடுத்து கொஞ்சிக் கொண்டு இருந்தார்.
அந்தப்பெண் கண்விழித்தபோது, உன் வீட்டுக்கு அனைத்து உதவிகளும் வரும், நீ செல் அம்மா என்று கூறி வழியனுப்பி வைத்தார். இதுதான் எம்.ஜி.ஆரின் பண்பு. எல்லா பெண்களையும் தாயாக நேசித்தவர் எம்.ஜி.ஆர். எனவேதான் அவர் உருவாக்கிய இயக்கத்தை அவருக்கு பிறகும் காப்பாற்ற ஒரு தாயை தந்தார். அவர் கொடுத்த மிகப்பெரிய கொடை ஜெயலலிதாவை நமக்கு அம்மாவாக கொடுத்ததுதான்.
எம்.ஜி.ஆர். வெள்ளை மனம் மட்டும் கொண்டவர். எவராலும் வெல்ல முடியாத வெல்ல மனம் கொண்டவராகவும் இருந்தார். திரைப்படத்தில் அவரை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போனார்கள். அரசியலிலும் அவரை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள். அவர் தனது வெற்றியின்போதெல்லாம் அந்த வெற்றிக்கு காரணமாக ரத்தத்தின் ரத்தமான மக்களையே கூறினார். எனவேதான் அவர் மக்கள் ஆட்சியை கொடுத்தார்.
அவரது வழியில் ஒரே வாரிசாக திகழ்ந்த ஜெயலலிதாவும் மக்களால் நான், மக்களுக்காக நான் என்றார். மக்களைப்பார்த்து, உங்களால் நான், உங்களுக்காக நான் என்று கூறினார். தீய சக்திகள் சூழ்ச்சிகளால் தமிழ் மக்கள் தாழ்ந்துவிடக்கூடாது என்று அ.தி.மு.க. இயக்கத்தை உருவாக்கியவர் புரட்சித்தலைவர். அவர் கொண்டு வந்த மக்கள் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. மக்களின் அமோக ஆதரவால் மக்கள் ஆட்சியை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். அதையே பொற்கால ஆட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா.
அவரால் வளர்க்கப்பட்ட படைவீரர்களாக, விசுவாசமிக்க தொண்டர்களாக நாம் இருக்கும்போது அ.தி.மு.க. ஆட்சியையோ, கட்சியையோ யாராலும் அழிக்க முடியாது.
நாக்கில் நரம்பில்லாமல் பேசுபவர்கள் குற்றம் சாட்டுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். ஒரு எதிர்க்கட்சி என்பது ஆட்சியில் நல்லது நடந்தால் பாராட்ட வேண்டும். தவறு நடந்தால் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் இங்கே இருக்கிற எதிர்க்கட்சிக்கு பாராட்டவும், சுட்டிக்காட்டவும் பரந்த மனம் இல்லை.
குறைகூறுவதை மட்டுமே வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். நடந்து கொண்டிருப்பது ஜெயலலிதாவின் ஆட்சி. தமிழக மக்களின் நம்பிக்கையால் கட்டப்பட்ட எக்கு கோட்டை.
இவ்வாறு துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.