தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற துறைமுக ஊழியரிடம் பணம் பறிப்பு
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற துறைமுக ஊழியரிடம் பணம் பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இசவன்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் சண்முகவேல்(வயது 60). இவர் ஓய்வு பெற்ற துறைமுக ஊழியர். இவர் நேற்று முன்தினம் பென்சன் பணத்தை எடுப்பதற்காக பீச் ரோட்டில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். வங்கியில் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து உள்ளார்.
அங்கு சிறிது தூரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்தார். அந்த ஆசாமி, சண்முகவேலிடம் நைசாக பேச்சுக் கொடுத்தாராம். பின்னர் பழைய பஸ்நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறி அவரை, தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றாராம். தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டில் வந்த போது, அந்த ஆசாமி திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். பின்னர் தனது நண்பர்கள் 2 பேரை செல்போனில் பேசி அழைத்தாராம்.
அவர்கள் வந்தவுடன் 3 பேரும் சேர்ந்து திடீரென சண்முகவேலை தாக்கியுள்ளனர். அவர் வைத்து இருந்த பணத்தை பறித்துக் கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்களாம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.