சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை தொடங்கியது
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 8–ந் தேதி நடக்கிறது. இதற்கான பூஜைகள் கடந்த 3–ந் தேதி முதல் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி 100 யாக குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிவபெருமானுக்கு 33 யாக குண்டங்களும், பாகம்பிரியாள் அம்பாளுக்கு 33 யாக குண்டங்களும், விநாயகர், முருகன், நடராஜர், சண்முகர், மற்றும் பரிகார மூர்த்திகளுக்கு மொத்தம் 34 யாக குண்டங்களும் ஆக மொத்தம் 100 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நேற்று மாலையில் விக்னேசுவர பூஜை, புண்யாக வாகனம், அங்குரார்ப்பனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், யாத்ராதானம், கடம் யாகசாலை பிரவேசம் நடந்தது. தொடர்ந்து தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் உத்தமபட்ச யாகசாலையில் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அனைத்து யாகசாலைகளிலும் சிவாச்சாரியார்கள் அமர்ந்து மந்திரங்களை ஓதி, யாகசாலை பூஜையை நடத்தினர்.
நிகழ்ச்சியில் திருப்பணிக்குழு தலைவர் ராஜாசங்கரலிங்கம், செயலாளர் விநாயகமூர்த்தி, பொருளாளர் ரமேஷ், ஆத்தூர் மணி, கோவில் நிர்வாக அதிகாரி அஜித் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.
இது குறித்து கோவில் திருப்பணிக்குழு துணை செயலாளர் விவேகம் ரமேஷ் கூறும் போது, சங்கரராமேசுவரர் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 8–ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழாவில் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவில் யாகசாலை பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு வசதியாக 8 இடங்களில் டி.வி.க்கள் வைக்கப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கு டி.ஏ.திருமண மண்டபம், எஸ்.ஏ.வி. பள்ளி, சைவவேளாளர் மண்டபம் ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது, என்று கூறினார்.