வீரவநல்லூர் அருகே நிலத்தகராறில், விவசாயி வெட்டிக்கொலை


வீரவநல்லூர் அருகே நிலத்தகராறில், விவசாயி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 6 Sep 2017 10:45 PM GMT (Updated: 6 Sep 2017 9:35 PM GMT)

வீரவநல்லூர் அருகே நிலத்தகராறில், விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி கோர்ட்டில் வாலிபர் ஒருவர் சரண் அடைந்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள சீனியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனிகுமார் என்ற துரைபாண்டி(வயது 60). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டு முன்பு உள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தது.

பின்னர் அந்த கும்பல், தூங்கி கொண்டு இருந்த துரைபாண்டியை தலை, கை, முதுகு உள்ளிட்ட பகுதியில் அரிவாளால் வெட்டியது. திடுக்கிட்டு கண் விழித்து பார்த்த அவர் எழுந்து அங்கிருந்து ஓடப்பார்த்தார். உடனே அந்த கும்பல் துரைபாண்டியின் உடலில் மேலும், மேலும் சரமாரியாக வெட்டியது. பலத்த வெட்டுப்பட்ட அவர் வேதனையில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே துரைபாண்டியன் ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், துரைப்பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:–

கொலை செய்யப்பட்ட துரைபாண்டியனுக்கும், ராஜகுத்தாலபேரியை சேர்ந்த வேல்சாமி மகன் மணிக்கண்டனுக்கும் நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்தது. இதுதொடர்பாக அவர்கள் இருவரும் சேரன்மாதேவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் துரைப்பாண்டிக்கு சாதகமாக சமீபத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

இதனால் மணிகண்டன் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர். துரைபாண்டியை கொலை செய்ய மணிகண்டன் தரப்பினர் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வெளியே திண்ணையில் அவர் தூங்குவதை தெரிந்து கொண்ட மணிகண்டன், தனது நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் துரைபாண்டியை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக மணிகண்டன், பந்தல்மேடு பகுதியை சேர்ந்த உதய்காந்த், பார்த்திபன், கோபு ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கொலையாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மணிகண்டன்(25) தூத்துக்குடி 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு கதிரவன் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை, போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story