மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ள கண்டன பொதுக்கூட்டம் திருச்சி ‘ஸ்தம்பிக்கும்’


மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ள கண்டன பொதுக்கூட்டம் திருச்சி ‘ஸ்தம்பிக்கும்’
x
தினத்தந்தி 7 Sept 2017 4:15 AM IST (Updated: 7 Sept 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ள கண்டன பொதுக்கூட்டம் திருச்சி ஸ்தம்பிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. பேசினார்.

திருச்சி,

திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நேற்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநகர தி.மு.க. செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். கூட்டத்தை தொடங்கி வைத்து தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசியதாவது:–

நீட் தேர்வு நமது எதிர்கால சந்ததியினரை வெகுவாக பாதிக்கும். தந்தை பெரியார் இல்லை என்றால் நமக்கு இட ஒதுக்கீடு கிடைத்து இருக்காது. இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது. எனவே தான் நீட் தேர்வை கண்டித்து 8–ந்தேதி(நாளை) திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நமது கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

இந்த கூட்டத்திற்கு நமது ஒன்றிய செயலாளர்கள் அதிக அளவில் தொண்டர்களை திரட்டி கொண்டு வரவேண்டும். இந்த கண்டன பொதுக்கூட்டம் திருச்சி ஸ்தம்பிக்கும் வகையில் அமையவேண்டும். திருச்சியில் நடக்க இருப்பது தான் முதல் பொதுக்கூட்டம். தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி நிலையானது அல்ல. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தியாக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, சேகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர கழக செயலாளர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.


Next Story