நீல திமிங்கல விளையாட்டு மிரட்டல் குறித்து புகார் செய்பவர்களுக்கு உதவி செய்ய போலீசார் நியமனம்


நீல திமிங்கல விளையாட்டு மிரட்டல் குறித்து புகார் செய்பவர்களுக்கு உதவி செய்ய போலீசார் நியமனம்
x
தினத்தந்தி 6 Sep 2017 10:45 PM GMT (Updated: 6 Sep 2017 9:49 PM GMT)

நீல திமிங்கல விளையாட்டு மிரட்டல் குறித்து புகார் செய்பவர்களுக்கு 24 மணிநேரமும் உதவி செய்ய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட போலீஸ்துறை சார்பில் நீல திமிங்கல (புளுவேல்) விளையாட்டு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஜான் வரவேற்றார். இதில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

நீல திமிங்கல விளையாட்டில் முகம் தெரியாத நபர் தான் நமக்கு கட்டளை இடுகிறான். முகத்தை காட்டாதவன் நிச்சயம் கெட்ட எண்ணம் கொண்டவனாக இருப்பான். அவன் கொடுக்கும் கட்டளைகளால் நம்மை அறியாமலேயே உயரமான இடம், தண்டவாளம், சுடுகாடு போன்ற இடங்களுக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபட நேரிடும். இறுதியில் நம்மை மரணத்துக்கு ஆட்படுத்துகிறான்.

எனவே முகம் தெரியாத நபர்கள் கூறுவதை மாணவர்கள் கேட்க வேண்டாம். யாரோ ஒருவன் நம்மை ஆட்டுவிக்க நாம் அனுமதிக்கக்கூடாது. ஆன்டிராய்டு போனில் மாணவர்கள் நல்ல விஷயத்தை பார்த்தால் அனைவரது முன் வெளிப்படையாக செயல்படுவர். ஆனால் ஆன்டிராய்டு செல்போனை தூக்கிக்கொண்டு தனியாகவோ, மறைவான இடத்துக்கோ சென்றால் அவர்கள் நீலதிமிங்கல விளையாட்டு அல்லது அது போன்ற ஏதோ ஒரு தவறான வழியில் செல்கின்றனர் என்பதே பொருள். எனவே அது போன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபட்டால் அதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

போலீசார் நியமனம்

இதே போல் பள்ளியிலும், தனிமைப்பட்டாலோ அல்லது பள்ளி நேரத்தில் பாதியில் ஏதாவது ஒரு பொய்யான காரணத்தை கூறி விடுப்பு எடுத்துச்சென்றாலோ, அவர்களை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். பெற்றோரையும் அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் கண்காணிப்பது என்பது இயலாது. எனவே தனிமைப்பட்டு செல்லும் மாணவர் குறித்து ஆசிரியரிடம் சக மாணவர்கள் தகவல் அளிக்க வேண்டும்.

நீல திமிங்கல விளையாட்டுக்கு ஆட்பட்டவர்களின் ரகசியங்களை முகநூல், வாட்ஸ்-அப் மூலம் வெளியில் விட்டுவிடுவதாக முகம் தெரியாத நபர்கள் மிரட்டலாம். அவ்வாறு வெளியிட்டால் அவர்கள் யார் என்பது அடையாளம் தெரிந்து விடும் என்பதால் அது சாத்தியமில்லை. எனவே அது போன்ற மிரட்டல்களுக்கு மாணவர்கள் அஞ்சத்தேவை இல்லை. நாம் துணிவுடன் இருந்தால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவ்வாறு யாராவது மிரட்டினால் எனது செல்போன் எண் 9444114125 அல்லது 8300071100 என்ற செல்போன் எண்ணிலோ புகார் செய்யலாம். அவ்வாறு புகார் செய்பவர்களுக்கு அதற்கு உரிய பதில் அளித்து உதவி செய்ய 24 மணிநேரமும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், பள்ளி நிர்வாகி மான்சிங், முதல்வர் அமிர்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story