பயிர்க் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்


பயிர்க் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-07T03:20:15+05:30)

பயிர்க் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து தஞ்சை அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்மாப்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். 2016-17-ம் ஆண்டிற்கு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை பயிர்க் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும், பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கக்கோரியும் இந்த போராட்டம் நடைபெறுவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி மற்றும் துளசிஅய்யா, பாலசுப்பிரமணியன், தங்கமணி, அசோக் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வங்கியை முற்றுகையிடுவதற்காக நேற்று வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை தடுத்தனர்.

சாலை மறியல்

இதையடுத்து விவசாயிகள் தஞ்சை- நாகை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பயிர்க் காப்பீட்டு தொகையை உடனே வழங்கக்கோரி கோஷங்களும் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story