வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன்-மனைவி உள்பட 3 பேர் பலி


வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன்-மனைவி உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 7 Sept 2017 4:45 AM IST (Updated: 7 Sept 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

திருவாலங்காடு,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை செக்கடி தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது44). கொத்தனார். இவருடைய மனைவி கார்த்திகா (32). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர்களுடைய மூத்த மகள் வர்ஷினி(12), கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் சாதித்யா (7), திருவாவடுதுறையில் உள்ள பள்ளியில் 2்-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுடைய வீட்டின் ஒரு பகுதியில் உள்ள சுவர் பழுதடைந்து இருந்தது. இதையடுத்து அதன் அருகே புதிதாக சுவர் எழுப்பப்பட்டது. இந்த சுவரில் சிமெண்டு பூசும் பணி முடிவடையாததால், பழுதடைந்த சுவரை இடிக்காமல் வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வெங்கட்ராமன் தனது மனைவி கார்த்திகா மற்றும் மகள்களுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் மழை பெய்தபோது, பழுதடைந்திருந்த சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது.

இதில் வெங்கட்ராமன், அவருடைய மனைவி கார்த்திகா, மகள் சாதித்யா ஆகியோர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வர்ஷினியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று மாலை 3 பேரின் உடல்களும் அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு நடந்தது. அப்போது உறவினர்கள் கதறி அழுதனர். வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வர்ஷினியை, பாரதிமோகன் எம்.பி., பூம்புகார் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 

Related Tags :
Next Story