கெங்கவல்லி அருகே குடும்பத்தகராறில் மனைவி சரமாரி குத்திக்கொலை தொழிலாளி கைது


கெங்கவல்லி அருகே குடும்பத்தகராறில் மனைவி சரமாரி குத்திக்கொலை தொழிலாளி கைது
x

கெங்கவல்லி அருகே குடும்பத்தகராறில் கத்தியால் குத்தி மனைவி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த கூடமலை பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 32), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (22). இளையராஜா சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் நேற்று காலையிலும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த இளையராஜா வீட்டில் இருந்த கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் படுகாயம் அடைந்த ஜெயலட்சுமியை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜெயலட்சுமி திடீரென இறந்தார்.

இதுகுறித்து கெங்கவல்லி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் கத்தியால் குத்தி மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story