தரம் குறைந்த ஆப்பிள்களை அனுப்பி புதுவை வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி
தரம் குறைந்த ஆப்பிள்களை அனுப்பி புதுவை வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 50). பழ வியாபாரி. இவர் வெளிமாநிலங்களுக்கு சென்று பழங்களை மொத்தமாக வாங்கி வந்து பிற வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி டெல்லி சென்று அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் முதல் ரக ஆப்பிள்களை விலை பேசி உள்ளார். அப்போது அதற்கான பேச்சுவார்த்தை முடிந்தநிலையில் ஆப்பிள்களை வாங்க முடிவு செய்து வியாபாரி சுகுமார் ரூ.10 லட்சம் முன்பணம் கொடுத்தார். அதன்பின் அவர் புதுவை திரும்பிவிட்டார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி நிறுவனம் சார்பில் புதுச்சேரிக்கு ஒரு லாரி நிறைய ஆப்பிள் பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதை பிரித்து பார்த்தபோது அவை தரம் குறைந்த 3–வது ரக ஆப்பிள் என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சுகுமார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளர் தீபக்குமார் என்பவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். ஆனால் அவரிடமிருந்து முறையான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுகுமார் தான் செலுத்திய பணத்தை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு பணமும் திருப்பி கிடைக்கவில்லை.
இதுகுறித்து சுகுமார் பெரியகடை போலீசில் மோசடி புகார் செய்தார். புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆப்பிள் பழங்களை ஏற்றி வந்த லாரியை மடக்கி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.